Breaking News
recent

திருக்காமேஸ்வரர் ஆலயம்

மன்மதன், கையில் பாணத்துடன் கலங்கி நடுங்கினான். இவனுடைய பாணமும் வலிமை மிக்கது; 'உடனே அம்பெய்துவாயாக!' என்று வலியுறுத்தும் பிரம்மதேவரும் வலிமை மிக்கவர். ஆனால், உடலையே ஜோதியாக கொண்டிருக்கும் சிவபெருமானை நோக்கி எப்படி அம்பெய்துவது? எரித்து விடுவாரே... என்று பயமும் பதட்டமுமாக நின்றான். 

''பார்வதி கல்யாணம் நடைபெற வேண்டும்; ஸ்ரீசுப்ரமணியரின் அவதாரம் நிகழ வேண்டும்; முக்கியமாக, சூரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்ய வேண்டும். இதற்கு தவத்தில் மூழ்கிக் கிடக்கும் சிவனார் கண் திறக்க வேண்டும். விடு அம்பினை!'' என்று பிரம்மதேவர் விடாப்பிடியாக வலியுறுத்த... வேறு வழியின்றி, கையில் இருந்த ஐந்து அம்புகளையும் ஒரே நேரத்தில் சிவனாரின் மீது விட... கண் திறந்து கோபத்துடன் பார்த்த சிவனார், மன்மதனை எரித்துச் சாம்பலாக்கினார். 


மிகப்பெரிய தவறுதான்; என்றாலும் கணவனாயிற்றே! 'கடவுளே! செய்தது பிழைதான். அதற்காக இறந்த கணவரின் உடலைக்கூட பார்க்கமுடியாத பாவியா நான்?! இறந்ததும் எரிக்கலாம்; ஆனால் எரித்துக் கொல்வது தகுமா? கணவரின் உடலை நான் பார்க்க அருள்புரியுங்கள்'' என்று சிவபெருமானிடம் மன்றாடினாள் ரதிதேவி. நெகிழ்ந்த சிவனார், ''சூட்சும உருவம் கொள்வான் உன் கணவன். அவன் உனக்கு மட்டுமே தென்படுவான்'' என்று அருளினார். அதுமட்டுமா? அவனது பாணத்தையும் தந்து அருளினார்! இது நிகழ்ந்த தலம் வெள்ளூர். இங்கே குடிகொண்டிருக்கும் இறைவன்... திருக்காமேஸ்வரர்! 

திருச்சியில் இருந்து முசிறி செல்லும் சாலையில் உள்ளது வெள்ளூர். இந்தச் சிறிய கிராமத்தில் அமைந்துள்ள பிரமாண்டமான ஆலயத்தில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேதராக அருளாட்சி செய்கிறார் திருக்காமேஸ்வரர்! இன்னொரு கதை! 

திருக்கயிலாயம். வில்வமர நிழலில் சிவனாரும் பார்வதியும் அமர்ந்திருக்க... மரத்தின் மீதிருந்த குரங்கு ஒன்று, இலையைப் பறித்து சிவ-பார்வதி மீது போட்டது. 'என்ன இது?' என்று அண்ணாந்து பார்த்த பார்வதிதேவிக்கு குரங்கின் சேட்டையைப் பொறுக்கமுடியவில்லை. அந்தக் குரங்கு எதுகுறித்தும் கவலையின்றி, இலையைப் பறிப்பதும் இறைவன் மீது போடுவதுமாகவே இருந்தது. குரங்கு கையில் கிடைத்த பூமாலை... என்றொரு பழமொழி உண்டுதானே? ஆனால், இங்கே, குரங்கு கையில் கிடைத்த இலையே பூமாலையானது! இதில் மகிழ்ந்த சிவனார், குரங்கை அழைத்தார்; ''பூலோகத்தில் மாபெரும் சக்கரவர்த்தியாகப் பிறப்பாய்'' என அருளினார். ஆடிப்போன குரங்கு, ''விளையாட்டாகச் செய்த காரியத்துக்கு வரமா? அப்படியெனில், இன்னொரு வரமும் தந்தருள வேண்டும். மனிதப் பிறவியிலும் இதே முகத்தை எனக்குக் கொடுங்கள் ஸ்வாமி! உடல் மனிதனாகவும் முகமானது, தங்களை தரிசித்த போது இருந்த இதே குரங்கு முகமாகவும் இருக்க அருள்புரியுங்கள் இறைவா!'' என்று கேட்க... 'அப்படியே ஆகட்டும்' என்றார் சிவனார்! அதன்படி பூலோகத்தில் சக்கரவர்த்தியாகப் பிறப்பெடுத்தார்; முசுகுந்த சக்கரவர்த்தியானார்; வசிஷ்டரிடம் ஞான உபதேசம் பெற்றார்; வலன் எனும் அசுரனை வதம் செய்யும் ஆற்றலைப் பெற்றார்; அசுரனை அழித்தார். முக்கியமாக... முருகப்பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருப்பரங்குன்றத்தில் திருமணம். விண்ணுலகத்தினர் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. பூலோகத்தில் ஒரேயருவருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. அது... முசுகுந்த சக்கரவர்த்திக்குத்தான்! அப்பேர்ப்பட்ட முசுகுந்த சக்கரவர்த்தி, சிவனாரை எண்ணி தவம் செய்து வழிபட்ட வனம்... இப்போது சிறப்புமிக்க தலமாக விளங்கும் வெள்ளூர் திருத்தலம்! இந்த ஆலயத்துக்கு வருவோர் அனைவருக்கும் அருள் வழங்குவது திருக்காமேஸ்வரரும் சிவகாமி அம்பாளும் மட்டும்தானா? அருளுடன் பொருளும் தந்து செழிக்க வைப்பவள் கோலோச்சும் ஆலயம் அல்லவா இது! 

ஒருகாலத்தில் அடர்ந்த வனப்பகுதியாகத் திகழ்ந்தது இந்த இடம். அவள்... சிவபெருமானை நோக்கி தவம் இருந்தாள். வில்வ இலைகளால் லிங்கத் திருமேனியை அர்ச்சித்து வழிபட்டாள். ஒருகட்டத்தில், இதில் நிறைவு அடையாமல், வில்வ மரமாகவே மாறினாள். நெடிதுயர்ந்த மரத்தில் இருந்து, லிங்கத்தின் மீது இலைகள் விழுந்தபடி இருந்தன. இதில் மகிழ்ந்தார் ஈசன். ஐஸ்வர்யத்துக்கு அதிபதி என்பதால் ஐஸ்வர்யன் என அழைக்கப்பட்டு, பிறகு ஈஸ்வரன் என்றான பரம்பொருள், குபேரனை நெருங்கிய தோழனாகவே பாவித்தவர் அல்லவா? எனவே, மரமாகவே மாறி பூஜித்த அவளுக்கு ஐஸ்வர்ய மகுடம் தந்து அருளினார்; அந்த நிமிடமே அந்த மரம், பெண்ணுருவம் எடுத்தது. அவள்... ஸ்ரீமகாலட்சுமி! ஐஸ்வர்ய மகுடம் தாங்கியதால் ஐஸ்வர்ய மகாலட்சுமியானாள்! இன்றைக்கும் திருக்காமேஸ்வரர் ஆலயத்தின் தட்சிண மூலையில் மகாலட்சுமிக்கு பதிலாக வில்வமரம் அமைந்துள்ளது. அப்படியெனில், மகாலட்சுமி? குபேர ஸ்தானத்தில், யோக நிலையில் காட்சி தருகிறாள். இவளை வணங்கினால், தொழிலில் விருத்தி ஏற்படும்; கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்; ஆபரணச் சேர்க்கை நிகழும் என்பர்.

இத்தனை பெருமைகளும் ஒருங்கே பெற்ற ஆலயத்தைத் தரிசிக்க ஆசை வருகிறதுதானே? அருளும் பொருளும் அள்ளித் தரும் ஆலயம், அலங்கோலமாகக் கிடக்கும் கோலத்தையும் பார்த்துவிட்டு வாருங்கள். சிதிலம் அடைந்து, பரிதாபமாக இருக்கும் இந்த ஆலயத்தில்தான் ஐஸ்வர்ய மகுடம் பெற்ற மகாலட்சுமியும் அருள்பாலிக்கிறாள்!

கிழக்குப் பார்த்த ஆலயம். மொட்டை கோபுர வாசல்; அருகே அரசமரமும் வேப்பமரமும் இருக்க, ஸ்ரீசந்தானப் பிள்ளையார் காட்சி தருகிறார். உள்ளே கிழக்குப் பார்த்தபடி அருளுகிறார் திருக்காமேஸ்வரர். முசுகுந்த சக்கரவர்த்தி வழிபட்ட லிங்க மூர்த்தம். இதனால்தான் இந்தப்பகுதிக்கு முசுகுந்தபுரம் என்றே பெயர் அமைந்ததாம். காலப்போக்கில் மருவி முசிறியானதாகச் சொல்வர். ரிஷபம் முதலான வாகனங்கள் அனைத்துமே உடைந்தும் உருக்குலைந்தும் கிடப்பதைப் பார்க்க வேதனைதான் மண்டுகிறது! தெற்குப் பார்த்தபடி அருளும் ஸ்ரீசிவகாமசுந்தரி; அருகில் நவக்கிரகம். 

கும்பாபிஷேகம் காணாமல் பல ஆண்டுகளாக இருந்த ஆலயம் இது! தற்போது பூஜைகள் மட்டும் நடந்து வருகின்றன. சிதிலம் அடைந்திருந்தாலும் சிற்ப வேலைப்பாடுகளால் களை இழக்காமல் இருக்கிறது கோயில்! ராவணனும் (ஆமாம்... இவனும் இங்கே பூஜித்து வழிபட்டதாகச் சொல்வர்) முசுகுந்தச் சக்கரவர்த்தியும் சிவனாரை வழிபடுவது போலான சிற்பமும் இங்கே உண்டு! பிராகாரத்தின் குபேர மூலையில் வில்வமர நிழலில், ஐஸ்வர்ய மகுடத்துடன், தவம் செய்யும் நிலையில், ஐஸ்வர்ய மகாலட்சுமியாக, யோக மகாலட்சுமியாக, பத்மாசனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறாள் தேவி. காண்பதற்கு அரிதான தோற்றம். அதுமட்டுமா? தகரக் கொட்டகையின் உள்ளே, தகதகக்கும் வெயிலில் வெப்பத்தை வாங்கியபடி காட்சி தரும் சோகமும் வேறெங்கும் காண முடியாது! இங்கே, காலபைரவர் மற்றும் ஞானபைரவர் உண்டு. மன்மதனுக்கு ஞானத்தை அருளிய அதே ஞானபைரவர்தான்! 

ஐஸ்வர்ய கடாட்சம் அருளும் மகாலட்சுமியின் சந்நிதியும் அவள் குடிகொண்டிருக்கும் ஆலயமும், லட்சுமி கடாட்சம் இன்றி இருக்கலாமா? ஞானமும் வீரமும் அருளும் திருக்காமேஸ்வரரின் ஆலயம் சிதைந்த நிலையில் இருப்பது நல்லதுதானா? 

வெள்ளூர் சிவாலயத்தில் திருப்பணிகள் நடைபெற வேண்டும்; விமரிசையாக கும்பாபிஷேகம் காண வேண்டும் என்பதே ஊர் மக்களின் ஆசை. நமது பிரார்த்தனையும் அதுதான்!

ஐஸ்வர்ய யோகம் வேண்டுமா? 

சுக்கிர வாரம் (வெள்ளிக்கிழமை) சுக்கிர ஓரையில் (காலை 6 முதல் 7 மணி வரை), ஸ்ரீஐஸ்வர்ய மகாலட்சுமிக்கு 16 வகை அபிஷேகங்கள் செய்து, 16 செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து, 16 நெய் தீபங்கள் ஏற்றி 

அம்பாளை 16 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்தால், 16 வகைச் செல்வங்களும் கிடைக்கும். செல்வச் செழிப்புடன் திகழலாம்; கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்.

பிரிந்த தம்பதி இணைவர்! 

அமாவாசை நாளில் ஆலயத்துக்கு வந்து திருக்காமேஸ்வரருக்கு வில்வ அர்ச்சனை செய்து, 11 நெய் தீபம் ஏற்றி, ஸ்வாமி- அம்பாள் மற்றும் பிராகாரத்தில் உள்ள வில்வமரத்தையும் சேர்த்து வலம் வந்தால், பிரிந்த தம்பதி ஒன்று சேருவர் என்பது நம்பிக்கை. இதேபோல் லிங்க மூர்த்தத்துக்கு புனுகு சார்த்தி, தயிர் சாதம் நைவேத்தியம் செய்து, 

வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தால், பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்கிறார் பாலசுப்ரமணிய குருக்கள் (98436 06044).

எங்கே இருக்கிறது? 

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகாவில் உள்ளது வெள்ளூர். பிரதான சாலையில் இருந்து ஊருக்குள் சென்றால், அழகிய ஆலயத்தை தரிசிக்கலாம். 

திருச்சி- முசிறி சாலையில், திருச்சியில்

இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவு; முசிறியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவு. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து மேலவெள்ளூருக்குச் செல்லும் பேருந்தில் (60 பி) செல்லலாம். முசிறியில் இருந்து மினி பஸ் வசதியும் உண்டு. 

கோயில் தொடர்புக்கு: 

பி. ஜெய்கிஷன், செயல் அலுவலர், 
திருக்காமேஸ்வரர் திருக்கோயில், 
வெள்ளூர், முசிறி தாலுகா
திருச்சி மாவட்டம்
செல்: 94437 60337
Muruganandham Vellur

Muruganandham Vellur

No comments:

Post a Comment

Alpha Vellur. Powered by Blogger.