Breaking News
recent

முசிறி அருகே வெள்ளூரில் சுந்தரபாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு

திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள வெள்ளூரில் கண்டுபிடிக்கப்பட்ட சடையவர்மர் சுந்தரபாண்டியர் கால கல்வெட்டு.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே 2-ம் பாண்டியப் பேரரசைச் சேர்ந்த சடையவர்மர் சுந்தரபாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக திருச்சி மா.ராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மைய இயக்குநர் முனைவர் இரா.கலைக்கோவன் கூறியதாவது:
திருச்சி மாவட்டம் முசிறி அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் அர.அகிலா தலைமையில் முசிறியைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஆய்வு மேற்கொண்ட முதுநிலை வரலாற்று மாணவர்கள் வீ.நிர்மலா, ச.லட்சுமி நாராயணன் ஆகியோர் 2-ம் பாண்டியப் பேரரசைச் சேர்ந்த சடையவர்மர் சுந்தர பாண்டியரின் கல்வெட்டுகள் சிலவற்றைக் கண்டறிந்துள்ளனர்.
வெள்ளூர் மேலத் தெரு பிள்ளையார் கோயிலை ஒட்டியுள்ள மணல்மேட்டில் புதைந்திருந்த கற்பலகையை கிராம மக்கள் உதவியோடு அகழ்ந்தபோது பெருமாள் கோயில் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. 1.09 மீட்டர் உயரம், 34 செ.மீ. அகலத்தில் உள்ள இந்த கற்பலகையின் இருபுறங்களிலும் தமிழ் எழுத்துகள் முன்பக்கம் 20 வரிகள், பக்கவாட்டில் 14 வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன.
சுந்தரபாண்டியரின் 18-ம் ஆட்சி ஆண்டை சேர்ந்த இந்த கல்வெட்டு ஊரில் உள்ள பெருமாள் கோயிலை திருமேற்கோயில் என்று அழைப்பதுடன், கோயில் முதன்மை தெய்வங்களான அழகிய பெருமாள், அவரது நாச்சியார் இருவர் உட்பட பிற தெய்வத் திருமேனிகளுக்கான காவல், அந்த இறைவடிவங்களுக்கான உணவுக் கலங்கள், பெருமையை வெளிப்படுத்தும் சின்னங்கள் ஆகியவற்றுக்கான பொறுப்பு கோதண்டராமபுரம் கைக்கோள முதலியான அபிமானபூசணரைச் சேரும் என்று பொறிக்கப்பட்டுள்ளது. கோதண்டராமபுரம் என்ற பெயர் வெள்ளூர் பிற்பாண்டியர் காலத்தே வணிக ஊராக விளங்கியதைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
கல்வெட்டு குறிப்பிடும் பெருமாள் கோயில் தற்போது ஓட்டைப் பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது. வயற்காட்டின் நடுவே புதர்கள் சூழச் சுற்றிவர முடியாதபடி மக்களால் கைவிடப்பட்ட நிலையில் உள்ள இந்த ஒருதளக் கோயில் சிதலமடைந்து காணப்படுகிறது. இதன் முக மண்டப முன் சுவரில் காணப்படும் 3 வரிக் கல்வெட்டு பிலவ வருடம் தை மாதம் அப்பகுதியில் நிகழ்ந்த பேரழிவைச் சுட்டுகிறது. இதை 100 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கொள்ளலாம்.
ஊரிலுள்ள சிவன் கோயிலிலிருந்து ஏற்கெனவே கல்வெட்டுகள் படி யெடுக்கப்பட்டிருந்த போதும் ஆய் வர்கள் இரு புதிய கல்வெட்டுகளை அடையாளப்படுத்தியுள்ளனர்.
பெருமண்டப வாயில் முகப்பு மேல்நிலையில் அடர்த்தியான சுண் ணாம்புப்பூச்சில் மறைந்திருந்த தமிழ்க் கல்வெட்டு சுந்தர பாண்டியரின் 2-ம் ஆட்சியாண்டுக்குரியது.
அந்த கோயிலில் உள்ள இறை திருமேனிகளை நீராட்டும் தபந மண்டபமும், ஆடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிருத்த மண்டபமும் சிங்கமங்கலத்தைச் சேர்ந்த வணி கரும் சீலைச் செட்டியார்களுள் ஒருவருமான பஞ்சநதிவாணன் ஏக நாயகன் ராஜநாராயணன் என்பவர் எழுப்பிய கட்டுமானங்கள் என்னும் தகவலை வெளிப்படுத்தும் இந்த கல்வெட்டை மாணவர்கள் உதவி யுடன் பூச்சை அகற்றி, பேராசிரியர் அகிலா படித்தறிந்துள்ளார்.
முன்மண்டபத் தூண் ஒன்றின் கீழ்ச்சதுரத்தில் வெட்டப்பட்டுள்ள 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் கல்வெட்டு உலக் கடம் பன் என்னும் பெயரைத் தருகிறது.
இந்த கண்டுபிடிப்புகள் குறித்த தகவல் மத்திய அரசின் கல் வெட்டுத்துறைக்கு தெரிவிக்கப்பட் டுள்ளது. பெருமாள் கோயிலைச் சீரமைக்கும் பணி ஊரார் துணை யுடன் நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்களைக் கொண்டு நிகழ்த் தப்படும் என கலைக்கோவன் தெரிவித்துள்ளார்.
Keywords: திருச்சி, முசிறி, வெள்ளூர், சுந்தரபாண்டியர் கால கல்வெட்டு

Unknown

Unknown

No comments:

Post a Comment

Alpha Vellur. Powered by Blogger.