Breaking News
recent

மஹாலட்சுமி ஐஸ்வர்ய மகுடம் பெற்ற திருத்தலம்!

மஹாலட்சுமி ஐஸ்வர்ய மகுடம் பெற்ற திருத்தலம்!
திருச்சிக்கு அருகே முசிறியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது வெள்ளூர். இங்கே உள்ளது சிவகாமசுந்தரி சமேத திருக்காமேஸ்வரர் ஸ்ரீஐஸ்வர்ய மஹாலட்சுமி திருக்கோயில்.

ஒருமுறை தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி பாற்கடலைக் கடைந்தனர். அப்போது அமுதத்தை தேவர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என மஹாவிஷ்ணு மோகினி வடிவெடுத்து அசுரர்களை மயக்கி லவண சமுத்திரம் எனும் உப்புக் கடலில் மயக்கித் தள்ளினார். ஸ்ரீவிஷ்ணுவின் மோகினி அவதாரத்தைக் கண்டு சிவபெருமான் மோகித்து மயங்கினார். அதனால் ஹரிஹர புத்திரன் உருவானார்.

இதனால் மகாலட்சுமி, விஷ்ணுவிடம் கோபம் கொண்டு, வைகுண்டத்தை விட்டு வெளியேறினாள். இதற்குக் காரணமான சிவபெருமானிடம் நீதி கேட்க எண்ணம் அவளுக்கு. ஆனால், சிவபெருமான் காட்சி தராமையால் பூலோகத்தில் வில்வாரண்ய க்ஷேத்ரம் எனும் வெள்ளூரில் தவம் செய்யலானாள். யுகம் பல தவம் இருந்தும் சிவபெருமான் காட்சி தராமையால் தன்னை வில்வ மரமாகவே மாற்றிக்கொண்டு லிங்கத் திருமேனியில் வில்வ மழையாகப் பொழிந்து பூஜை செய்தாள்.

1
இதனால் மகிழ்ந்த ஈசன் மஹாலட்சுமி முன்னர் தோன்றி ஹரிஹரபுத்ர அவதாரத்தின் நோக்கத்தை விளக்கி, மஹாலட்சுமியை சாந்தப்படுத்தினார். மேலும், ஸ்ரீவத்ஸ முத்திரையுடன் கூடிய சாளக்கிராமம் செய்து மஹாவிஷ்ணுவின் இதயத்தில் மஹாலட்சுமியை ஸ்தாபித்து மஹாலட்சுமியையும் விஷ்ணுவையும் சேர்த்து வைத்தார் சிவனார்.

வில்வ மரமாகத் தோன்றி வில்வ மழை பொழிந்து சிவபூஜை செய்ததன் பலனாக இங்கே சிவனார் மஹாலட்சுமிக்கு ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த ஐஸ்வர்ய மகுடத்தை அளித்து மஹாலட்சுமியை ஐஸ்வர்யத்துக்கு அதிபதியாக்கினார் என்கிறது இத்தலத்தின் புராணம். எனவேதான் வேறு எங்கும் காணாத வகையில் இங்கே வடமேற்குப் பகுதியில் மஹாலட்சுமி இருக்க வேண்டிய இடத்தில் வில்வமரமும், அதன் நிழலில் சிவலிங்கத்துடன் கூடிய ஸ்ரீவத்ஸமுத்திரை பதித்த ஐஸ்வர்ய மகுடத்துடன் தவம் செய்யும் கோலத்தில் கோயிலின் குபேர பாகத்தில் ஐஸ்வர்ய மஹாலட்சுமியும் அற்புதக் கோலம் கொண்டு பக்தர்களுக்கு அருள் வழங்குகின்றனர்.

இத்தலத்தில் இறைவனுக்கு ஐஸ்வர்யேஸ்வரர், லட்சுமிபுரீஸ்வரர், ஸ்ரீவத்ஸ அனுக்ரஹர் என்றெல்லாம் பெயர். மஹாலட்சுமி ஐஸ்வர்யத்திற்கு அதிபதியான தலம். அதுபோல சுக்ரன் மற்றும் குபேரன் சிவபெருமானை வழிபட்டு சுக்ரன் போகத்துக்கு அதிபதியாகவும், குபேரன் தன அதிபதியாகவும் ஆனது இத்தலத்தில்தான் என்கிறது தலபுராணம்.

முசுகுந்தனுக்கு சக்கரவர்த்தி பதவியையும், வாளாசுரனை வெல்லக்கூடிய ஆயுதங்களையும் கொடுத்து கால பைரவர் படைத்தளபதியாகச் சென்று முசுகுந்தனுக்கு வெற்றியைக் கொடுத்த தலம். ஆகவே, இவ்வூர் வெல்லூர் எனப்பெயர் பெற்றது. வலனை அழிக்கப் புறப்பட்ட முசுகுந்தனுக்குத் தளபதியாக வந்து அருளிய கால பைரவரையும், மன்மதனுக்கு அருளிய ஞான பைரவரையும் கிழக்கு நுழைவாயில் அருகே தரிசிக்க முடிகிறது.

போகர் ஏழாயிரம் எனும் நூலில் திருக்காமேஸ்வரர், திருச்சன்னதியில் போகர் சிவபோக சக்கரத்தை பிரதிஷ்டை செய்து அதில் அமர்ந்து தவம் செய்வதாகவும், சித்தர்கள் அனைவரும் எங்கு சென்று தவம் செய்தாலும், சித்திக்காத காரியம் திருக்காமேஸ்வர் சன்னதியில் அமர்ந்து தவம் செய்தால் சித்தி ஆகும் என்பதால், போகர், பாம்பாட்டி சித்தர், புலிப்பாணி ஆகியோர் தலைமையில் கோயிலைச் சூழ்ந்து சித்தர்கள் குழுமமே தவம் செய்வதாகவும், வெள்ளூர் திருக்காமேஸ்வரப் பெருமானிடம் போகர் சிவபோகச் சக்கரத்தை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்த பின்னரே பழனியில் நவபாஷான ஞான தண்டாயுதபாணி விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்ததாக போகர் ஏழாயிரத்தில் குறிப்பிட்டுள்ளது வியக்கத்தக்கதாகும்.

3


இன்னும் திருக்காமேஸ்வரர் ஆலயத்தின் முன் மஹா மண்டபத்தில் போகர் பிரதிஷ்டை செய்த சிவபோகச்சக்கரத்தை தரிசனம் செய்யலாம். ஆலயத்தின் ஈசான பாகத்தில் அமைந்துள்ள சுரங்கத்தில் சிவலிங்க வடிவமாக போகர் காட்சி தருகிறார். அரூபமாக இன்னும் எண்ணற்ற பல சித்தர்கள் தவம் செய்வதாக அகஸ்த்தியர் நாடியிலும், விசிஷ்ட நாடியிலும், காகபுஜண்டர் நாடியிலும் காணப்படுவது சிறப்பானதாகும். சித்தர்களுக்கே எங்கு சென்றும் சித்திக்காத காரியம் திருக்காமேஸ்வரர் சன்னதியில் சித்தியாகும் என்பதால் மனிதர்களாகிய நாம் நினைக்கும் காரியம் சித்தியாக திருக்காமேஸ்வரர் சன்னதியில்  தவம் செய்வது சிறப்பு.

மன்மதன் திருக்காமேஸ்வர பெருமானிடம் காமபானத்தைப் பெற்று அதை உயிரினங்களின் மேல் எவ்வாறு செயல்படுத்துவது என்ற விகிதாச்சாரம் தெரியாமல் திகைத்தார். உடனே பைரவரை தியானித்து பைரவர் பாதங்களில் காமபானத்தினால் மலர்மாரி பொழிந்து வழிபட்டார். பைரவர் மகிழ்ந்து ஆவுடையார் மேல் நின்று ஞான பைரவராக காட்சித்தந்து காமபானத்தை எந்தெந்த உயிர்களுக்கு எந்தெந்த விகிதத்தில் செயல்படுத்த வேண்டுமென்ற ஞானத்தை மன்மதனுக்குக் கொடுத்து ஞானபைரவராக தற்போது காட்சித் தருகின்றார். எனவே கல்வியில் சிறந்து விளங்க நினைக்கும் மாணவர்கள்,  ஞாயிற்றுக்கிழமை 4.30 மணி முதல் 6.00 மணி வரை ராகுகால நேரத்தில் 16 மிளகு தீபம் ஏற்றி செவ்வரளி மாலை அணிவித்து ஞானபைரவரை வழிபட்டால் ஞான அபிவிருத்தி ஏற்படும்.

இத்தலத்திற்கு திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 60 மேலவெள்ளூர் நகரப் பேருந்து காலை, மாலை வேளைகளில் செல்கிறது.

Reference : Dinamani
Editor by :
SmartMGA

SmartMGA

No comments:

Post a Comment

Alpha Vellur. Powered by Blogger.